விஜய் தலைமையில் அரசு அமைக்க ஆதரவு கோரி, தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) இணை பொதுச்செயலர் நிர்மல்குமார் சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள அலுவலகங்களில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் வீரபாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் சண்முகம் ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார். த.வெ.க. ஆட்சி அமைக்க அவர்களின் ஆதரவு முக்கியம் என்பதால் முடிவை விரைவில் தெரிவிக்குமாறு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு, கட்சியின் உயர்மட்டக் குழுவை கூட்டி ஆலோசித்து விரைவில் முடிவை அறிவிப்பதாக இருவரும் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், நிர்மல்குமாரின் மொபைல் போன் மூலம் விஜயும் அவர்களிடம் பேசி ஆதரவு கேட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல்குமார், சட்டப்படி தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் என்றும், தமிழகத்தின் பெரும்பாலான மக்கள் விஜய் முதல்வராக வேண்டும் என வாக்களித்துள்ளதாகவும் கூறினார். வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கேட்டுள்ளோம்; கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு இருக்கும் என முன்பே தெளிவுபடுத்தியுள்ளோம் என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளை தாங்கள் அழைக்கவில்லை; அந்த எண்ணமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். போலீஸ் பாதுகாப்பால் மக்கள் இடையூறு சந்திப்பதாகக் கூறி அதை வேண்டாம் என்று விஜய் தெரிவித்ததாகவும், கவர்னர் சட்டப்படி முடிவு எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் நிர்மல்குமார் கூறினார்.





