அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர 14 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் விரைவில் கையெழுத்திடக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் தொடர்பான போர் இரண்டு மாதங்களை கடந்துள்ள நிலையில், தற்போது தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
மோதலை கைவிடுவது குறித்து நேரடியாகவும், மத்தியஸ்தர்கள் வழியாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்ததாக கூறப்படுகிறது. அமெரிக்க அமைதி பேச்சுக் குழுவைச் சேர்ந்த ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஈரானிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பேச்சுகளின் பயனாக, இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில் 14 அம்சங்கள் கொண்ட ஒருபக்க ஆவணம் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்காவை தளமாக கொண்ட தனியார் செய்தி நிறுவனம் ‘ஆக்ஸியோஸ்’ ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் கையெழுத்தாகலாம் என்றும் தெரிவித்துள்ளது.
தகவலின்படி, முக்கிய அம்சங்களில் இரு நாடுகளுக்கிடையேயான மோதலை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டு வருவது, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான கடல் போக்குவரத்துக்கு ஈரான் உத்தரவாதம் அளிப்பது, அதற்குப் பதிலாக ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை விலக்கப்படுவது ஆகியவை இடம்பெறுகின்றன. மேலும், யுரேனியம் செறிவூட்டலை ஈரான் நிறுத்தி வைக்க ஒப்புக்கொள்ளும் என்றும், இது 15 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது; தற்போதைய உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை அகற்ற அல்லது செயலிழக்க செய்யவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
இதற்குப் பதிலாக அமெரிக்கா படிப்படியாக பொருளாதார தடைகளை தளர்த்தி, முடக்கப்பட்ட ஈரானின் நிதிகளை விடுவிக்கும் என கூறப்படுகிறது. இரு தரப்பும் கையெழுத்திட்ட பின் 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும், சில முக்கிய அம்சங்களில் ஈரானின் நிலைப்பாட்டை தெரிவிக்க 48 மணி நேர காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது.





