தவெகுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஆலோசித்து ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மே 8 நடைபெறும் கட்சி கூட்டம் முடிந்ததும் விசிக நிலைப்பாடு தெரிவிக்கப்படும் என்றார். மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள நிலையில், அவர்கள் மாநிலக் குழுவில் எடுக்கும் முடிவை அறிந்த பிறகே விசிக முடிவை அறிவிப்போம் என்றும் கூறினார்.

அதிமுக–திமுக கூட்டணி ஒரு வடிவத்திற்கு வந்ததாகத் தெரியவில்லை; அப்படி உருவானால் அப்போது தான் எங்கள் நிலைப்பாட்டை சொல்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதுவரை தவெக நிர்வாகிகளை நேரில் சந்திக்கவில்லை; வாட்ஸப்பில் கடிதம் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மட்டுமே வந்ததாகவும், பொறுப்பாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்போம் என்று தெரிவித்ததாகவும் கூறினார்.

கவர்னரின் அணுகுமுறை அதிர்ச்சியளிப்பதாக கூறிய திருமாவளவன், இது திட்டமிட்ட நெருக்கடியாகத் தோன்றுகிறது என்றார். 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என கவர்னர் கூறியதாகவும், அதை இதுவரை காண்பிக்கவில்லை என்று எழுத்துப்பூர்வமாக வழங்கியதாகவும் வரும் தகவல்களை சுட்டிக்காட்டி, இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்றும் தெரிவித்தார். இதற்கு காங்கிரசுடன் தவெக கொண்டுள்ள நட்பு காரணமாக சொல்லப்படுவதாகவும் அவர் கூறினார்.