சென்னையில் தமிழக கவர்னர் அர்லேக்கரை தவெக தலைவர் விஜய் இன்று மாலை நேரில் சந்திக்க உள்ளார். இது கடந்த சில நாட்களில் நடைபெறும் அவரது மூன்றாவது சந்திப்பாகும்.
108 இடங்களை வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ள தவெக, ஆட்சியமைக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. காங்கிரஸ் தனது 5 எம்எல்ஏக்களின் ஆதரவை அறிவித்தாலும், பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை இன்னும் பூர்த்தியாகாத நிலை இருந்தது.
118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்கள் கிடைத்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என கவர்னர் அர்லேக்கர் முன்பே தெரிவித்திருந்தார். இதையடுத்து தவெக, இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு, இரு இடதுசாரி கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்து, ஆதரவு கடிதங்களையும் வழங்கியுள்ளன. இதன் மூலம் தவெக அணி மொத்தம் 116 இடங்களை நெருங்கியுள்ளது. விசிக தனது முடிவை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும், இடதுசாரிகளைப் பின்பற்றி ஆதரவு அளிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சந்திப்பு முதலில் மாலை 4.30 மணிக்கு என கூறப்பட்ட நிலையில், தற்போது மாலை 6 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில், ஆதரவு அளித்துள்ள கட்சிகளின் கடிதங்களை கவர்னரிடம் வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோருவார் என தெரிவிக்கப்படுகிறது.





