சென்னை: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) தங்கள் ஆதரவு, மதச்சார்பின்மையில் உறுதியாக நிற்பதையே அடிப்படையாகக் கொண்டது என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ. சண்முகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சட்டசபை தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்க்கு 5 எம்எல்ஏக்கள் கொண்ட காங்கிரஸ் கட்சியும், தலா 2 எம்எல்ஏக்கள் கொண்ட இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு கடிதங்களை வழங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி திணிக்கப்படுவதைத் தடுக்கவும், அதிகாரத்தை கைப்பற்ற பாஜ முயற்சிப்பதைத் தடுக்கவும் இந்த ஆதரவு என இடதுசாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மதச்சார்பின்மையில் உறுதியோடு நிற்பதற்கே தவெகவுக்கு ஆதரவு என சண்முகம் தனது பதிவில் மீண்டும் கூறி, விஜயுடன் பேசிய வீடியோ ஒன்றையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.

ஒரு நிமிடம் 3 வினாடிகள் நீளமுள்ள அந்த வீடியோவில், ஒரு பக்கம் பாலகிருஷ்ணனும் மறுபக்கம் பெ. சண்முகமும் அமர்ந்து பேசும் காட்சிகள் இடம்பெறுகின்றன. விஜய் அவர்களுடன் பேசுவதும், அவர்கள் கூறுவதை ஆமோதித்தபடி பதிலளிப்பதும் அதில் காணப்படுகிறது.