புதுடில்லி: தலைநகர் டில்லி உள்ளிட்ட பல இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக கூறி, பாகிஸ்தானின் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ. தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 9 பேரை டில்லி போலீசார் சிறப்பு பிரிவு மூலம் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் டில்லியின் பல பகுதிகளில் தாக்குதல் திட்டம் இருக்கலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, சிறப்பு பிரிவு போலீசார் “கேங் பஸ்ட் ஆப்பரேஷன் 2.0” என்ற பெயரில் நடவடிக்கையை தொடங்கி பல இடங்களில் சோதனை நடத்தினர்.
அந்த நடவடிக்கையில், ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட் என குறிப்பிடப்படும் ஷசாத் பாத்தியுடன் தொடர்புடைய இருவர் முதலில் பிடிபட்டனர். அவர்களிடம் நடந்த விசாரணை மற்றும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ரகசிய விசாரணையின் அடிப்படையில், அதே வலையமைப்பைச் சேர்ந்ததாக கூறப்படும் மேலும் பலரை கண்டறிந்து மொத்தம் 9 பேரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கைதானவர்கள் குழுக்களாக பிரிந்து முக்கிய இடங்களை நோட்டமிட்டு படம் மற்றும் வீடியோ எடுத்து, ஷசாத் பாத்தி மற்றும் ஐ.எஸ்.ஐ. தொடர்புடையவர்களுக்கு அனுப்பியதாக போலீசார் கூறினர். டில்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஹிந்து கோவில், டில்லி–சோனிபட் நெடுஞ்சாலையிலுள்ள பிரபல தாபா, ஹரியானா ஹிசாரில் உள்ள ராணுவ முகாம், உத்தர பிரதேசத்தின் முக்கிய போலீஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்கள் குறிவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கைதானவர்களிடமிருந்து ஆயுதங்கள், மொபைல் போன்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் கூறினர். மேலும் அவர்கள் பாகிஸ்தான் சென்று வெடிகுண்டு தாக்குதல் மற்றும் கையெறி குண்டு வீசுதல் உள்ளிட்டவற்றில் பயிற்சி பெற்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு பின்னர் டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.





