சென்னை: அமமுக தலைவர் டிடிவி தினகரன், மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் ராஜ்பவனுக்கு வருவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து மீண்டும் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னரை சந்தித்தார்.
இதற்கு முன்பு, தனது கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ காமராஜை காணவில்லை என்றும், தமிழகத்தில் நடிகர் விஜயின் கட்சியான தமிழக வெற்றி கழகம் (தவெக) ‘குதிரை பேரம்’ நடத்துகிறது என்றும் தினகரன் கவர்னரிடம் புகார் அளித்திருந்தார்.
கவர்னரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தங்களது எம்எல்ஏ பெயரில் வழங்கப்பட்ட கடிதம் மோசடியானது என கூறினார். ‘தூய கட்சி’ என பேசிக்கொண்டு தவெக மோசடியில் ஈடுபடுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த சந்திப்பின்போது எம்எல்ஏ காமராஜும் தினகரனுடன் இருந்தார். தனது பெயரில் தவெக ஆதரவாக வழங்கப்பட்ட கடிதம் போலியானது என காமராஜ் தெரிவித்தார்.
காமராஜ் பெயரில் போலிக் கடிதத்தை கவர்னரிடம் வழங்கியதாக கூறப்படும் தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரன் வலியுறுத்தினார். இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.





