சென்னை: தவெகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைக்காத நிலையில், ‘பாஜ’ என்ற வார்த்தையையே தவெக ஏன் சொல்லத் தயங்குகிறது என்று திமுக வெளிப்படையாக விமர்சித்துள்ளது.
தமிழகத்தில் பல கட்சிகள் கவர்னரின் நடவடிக்கையின்மையை விமர்சித்து வரும் சூழலில், தவெகவும் விஜயும் பிற கட்சிகளின் ஆதரவைப் பெறுகின்றனர். ஆனால் கவர்னர் செயல்பாடு குறித்து விஜய் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும், நேரடி விமர்சனமும் முன்வைக்கவில்லை என்றும் திமுக கூறியுள்ளது.
இதையடுத்து திமுக தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், புதிய அரசு அமைப்பதற்கான நடைமுறைகளைத் தொடங்க வேண்டும் என்று திமுக தலைவர் முன்பே கவர்னரை வலியுறுத்தியதாக தெரிவித்தது. மேலும் கூட்டணி கட்சிகளிடம், அவர்கள் எடுக்கும் முடிவுக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறியதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே பதிவில், ஆட்சி அமைக்க வேண்டும் என்று கோரும் தவெக இதுவரை கவர்னர் குறித்தோ பாஜ குறித்தோ ஒரு வார்த்தையும் பேசாதது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. திமுக தலைவர் தெளிவாக கூறிய பிறகும் ‘குதிரை பேரம்’ குறித்து பேசுவது ஏன், ‘பாஜ’ என்ற சொல்லைச் சொல்ல பயம் எதற்கு என்றும் திமுக விமர்சித்துள்ளது.





