சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு இன்ஜினியரிங் சேர்க்கைக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்பு இருப்பதாக கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார். இதற்கு பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில் காணப்படும் போக்கு காரணமாக இருப்பதாக அவர் கூறினார்.

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 7.53 லட்சம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், உயர் கல்வி சேர்க்கைக்கான தயாரிப்புகள் தொடங்கியுள்ளன. ஆனால் கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது பல பாடங்களில் 100க்கு 100 பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், கணிதத்தில் கடந்த ஆண்டு 3,022 பேர் முழு மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 732 பேர் மட்டுமே பெற்றுள்ளனர். இயற்பியலில் 1,125 இருந்து 105 ஆகவும், வேதியியலில் 3,181 இருந்து 632 ஆகவும் 100/100 பெற்றோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

இதன் விளைவாக இன்ஜினியரிங் கட்-ஆப் 2 முதல் 4 மதிப்பெண் வரை குறையலாம் என்றும், குறிப்பாக 180–195 வரம்பில் உள்ளவர்களுக்கு 2–4 மதிப்பெண் குறைவு இருக்கலாம் என்றும் அவர் கூறினார். 160–170 வரம்பில் உள்ளவர்களுக்கு 6 மதிப்பெண் வரை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். வணிகவியல், பொருளியல் பிரிவுகளில் பெரிய மாற்றம் இருக்காது என்றும், கணக்கு பதிவியலில் 100/100 பெற்றோர் அதிகரித்ததால் அரசு கல்லூரிகளில் போட்டி வழக்கம்போல் அதிகமாகவே இருக்கும் என்றும் கூறினார்.

மேலும் மீன்வளம், வேளாண்மை போன்ற பாடப்பிரிவுகளின் கட்-ஆப்பும் 2–4 மதிப்பெண் வரை குறையலாம் என்றும், உயிரியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றோர் குறைந்ததால் பி.எஸ்.சி. நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளின் கட்-ஆப்பும் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். கட்-ஆப் குறையக்கூடும் என்பதால் மாணவர்கள் அவசரப்பட்டு நிர்வாக ஒதுக்கீடு இடங்களை நாடாமல், கடந்த ஆண்டுகளின் கல்லூரி வாரியான கட்-ஆப் விவரங்களை பார்த்து தேவையெனில் முடிவு எடுக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.