லண்டன்: சொகுசு சுற்றுலா கப்பலில் பணியாற்றும் இரு இந்தியர்கள் ‘ஹண்டா’ வைரஸ் தொற்று அபாயத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது. அவர்களை சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நெதர்லாந்தைச் சேர்ந்த ‘ஓஷன்வைட் எக்ஸ்பெடிஷன்ஸ்’ நிறுவனத்தின் எம்.வி. ஹோண்டியஸ் என்ற டச்சு கப்பல், ஏப். 1 அன்று அர்ஜென்டினாவின் உஷுவாயாவில் இருந்து பயணத்தை தொடங்கியது. இது நாளை ஸ்பெயினின் கேனரி தீவுகளை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் கப்பலில் இருந்த பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், பரிசோதனையில் அது எலிகள் மூலம் பரவக்கூடிய ஹண்டா வைரஸ் என உறுதி செய்யப்பட்டது. இதுவரை ஐந்து பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், நெதர்லாந்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும் ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவரும் என இருவர் உயிரிழந்துள்ளனர்.
தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட செயின்ட் ஹெலினா தீவில் இருந்து 40 பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த அவர்களை, அந்தந்த நாட்டு அதிகாரிகள் மீட்டு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
WHO இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், கப்பல்கள், கிடங்குகள், சேமிப்பு வசதிகள் போன்ற போதிய காற்றோட்டம் இல்லாத இடங்களில் எலிகளின் சிறுநீர், எச்சம் அல்லது உமிழ்நீரால் மாசுபட்ட காற்றில் உள்ள வைரஸ் துகள்களை சுவாசிப்பதன் மூலம் ஹண்டா வைரஸ் பரவக்கூடும் என்றார். ஆசியா மற்றும் ஐரோப்பாவில் காணப்படும் வகைகளில் மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுவது அரிது என்றும், ‘ஆண்டிஸ்’ வைரஸ் போன்ற சில தென் அமெரிக்க வகைகளில் மட்டும் அத்தகைய பரவல் பதிவாகியுள்ளது என்றும் தெரிவித்தார். தற்போதைய சம்பவம் தீவிரமானதாக இருந்தாலும், உலகளாவிய பொது சுகாதார அபாயம் குறைவாகவே உள்ளதாகவும், தொடர்புகளை கண்டறிந்து கண்காணிக்கும் பணிகளில் சர்வதேச சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.





