சென்னை: மாநில உளவுத்துறைக்கு சிறப்பு பணியாக நியமிக்கப்பட்ட இரண்டு எஸ்.பி.க்கள், அவர்கள் முன்பு பணியாற்றிய மாவட்டங்களுக்கே மீண்டும் மாற்றப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்ட எஸ்.பி. விஸ்வேஷ் பாலசுப்பிரமணியன் சாஸ்திரி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. அரவிந்த் ஆகியோர், தமிழகத்தில் புதிய ஆட்சி அமைய உள்ள நிலையில் பதவி ஏற்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் தொடர்பான பணிகளுக்காக உளவுத்துறைக்கு சிறப்பு பணியாக நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை தேர்தல் ஆணையத்தால் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்ட சந்தீப்ராய் ரத்தோட் பிறப்பித்திருந்தார்.

ஆனால், தற்போதைய உளவுத்துறை டி.ஜி.பி. பாலநாகதேவி இந்த நியமனங்களை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. தன்னிடம் ஆலோசனை பெறாமலும், உள்துறை ஒப்புதல் இன்றியும் முறையற்ற வகையில் நியமனம் செய்யப்பட்டதாகக் கூறி, கவர்னர் மற்றும் தலைமைச் செயலருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இரு எஸ்.பி.க்களும் தங்கள் மாவட்டங்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும், த.வெ.க. தலைவர் விஜய் வீட்டின் பாதுகாப்பு பணிக்காக சிறப்பு பணி அதிகாரியாக நியமிக்கப்பட்ட வேலூர் டி.ஐ.ஜி. தர்மராஜனும் அந்த சிறப்பு பணியில் இருந்து விலக்கப்பட்டார்; அவர் வேலூருக்கு செல்லாமல் விடுமுறையில் இருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.