மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் செயல்பட்ட ஐ.டி.-பி.பி.ஓ நிறுவனத்தில் பெண் ஊழியர்களுக்கு கட்டாய மதமாற்றம் மற்றும் தொல்லை அளிக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில், மனிதவளப் பிரிவு அதிகாரி நிடா கான் (27) கைது செய்யப்பட்டுள்ளார்.
18 முதல் 25 வயதுக்குட்பட்ட பெண் ஊழியர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு தொல்லைகளுக்கு, பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட புகார்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தியதில், நிறுவனத்தில் பணியாற்றிய சில முஸ்லிம் ஆண் ஊழியர்கள் பெண் ஊழியர்களை கட்டாயமாக மதமாற்றம் செய்ய முயன்றதாகவும், மறுத்தவர்களுக்கு பாலியல் ரீதியான தொல்லை அளிக்கப்பட்டதாகவும் உறுதியானதாக போலீசார் கூறினர்.
நிடா கான் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காமல் தடுக்க முயன்றது, ‘ஹிஜாப்’ அணிய வற்புறுத்தியது, மதமாற்றத்திற்கு தூண்டியது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார். மேலும், பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டில் உள்ள மற்றவர்களுக்கு அவர் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் கட்டாய மதமாற்றம் மற்றும் பாலியல் தொல்லை உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, நிறுவனத்தில் பணியாற்றிய எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஏழு ஆண்கள் மற்றும் பணியிட பாலியல் புகார்களை விசாரிக்கும் ‘போஷ்’ குழுவில் இருந்த அஷ்வின் சைனானி என்ற பெண்ணும் அடங்குவர்.
தலைமறைவாக இருந்த நிடா கான் இடம் இடமாக தங்கியதால் பிடிக்க முடியாமல் இருந்த நிலையில், சம்பாஜிநகரின் நாரேகாவ்ன் பகுதியில் உறவினர் வீட்டில் அவர் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு நாசிக்குக்கு அழைத்து வந்தனர். மே 11 வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நாசிக் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.





