மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத் துறை எச்சரித்ததைத் தொடர்ந்து, அவர் பல வாரங்களாக பதுங்கு குழியில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைனுடன் நடைபெறும் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், புடினின் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக கூறப்படுகிறது. சில ரஷ்ய செல்வந்தர்கள் அவரது ஆட்சியை அகற்ற திட்டமிட்டுள்ளதாகவும், அதனால் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
‘பினான்சியல் டைம்ஸ்’ வெளியிட்ட அறிக்கையில், புடின் மீது கொலை முயற்சி மற்றும் ராணுவ புரட்சி குறித்த அச்சம் அதிபர் மாளிகையை உலுக்கி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக உக்ரைனின் “ஆப்பரேஷன் ஸ்பைடர்வெப்” என அழைக்கப்படும் ட்ரோன் தாக்குதல் நடவடிக்கைக்குப் பிறகு அவர் கடும் பதற்றத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதே அறிக்கையின் படி, கடந்த மார்ச் மாதம் முதல் புடினின் பாதுகாப்பு முன்னெப்போதும் இல்லாத அளவில் பலப்படுத்தப்பட்டுள்ளது. மாஸ்கோவை விட்டு வெளியேறி, ரஷ்யாவின் கிராஸ்னோடர் பகுதியில் உள்ள நவீனமயமாக்கப்பட்ட ரகசிய பதுங்கு குழியிலிருந்து அவர் தற்போது போரை வழிநடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வல்லரசு நாட்டின் தலைவராக வலம் வந்தவர் தற்போது உள்ளக-வெளியக அச்சங்களுக்கிடையில் பாதுகாப்பு வளையத்துக்குள் செயல்படுவதாக அந்த அறிக்கை சித்தரிக்கிறது.





