தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வரும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க, கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களை உடனடியாக அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் நிலுவையில் உள்ள என்.ஐ.ஏ. வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பல வழக்குகள் ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் தேங்கி இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், ஒரு உயர் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும் என தெரிவித்தனர்.

அதன்படி, 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தால் இரண்டு சிறப்பு நீதிமன்றங்களும், 25-க்கும் அதிகமான வழக்குகள் இருந்தால் மூன்று சிறப்பு நீதிமன்றங்களும் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த நீதிமன்றங்களில் தினசரி அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும்; நீதிபதிகளுக்கு பிற கூடுதல் பணிகளை ஒதுக்கக் கூடாது; மாதத்திற்கு குறைந்தது ஒரு வழக்கிலாவது இறுதி தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

மேலும், நீதிமன்றங்களுக்கான இடவசதி, ஊழியர்கள் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவையான நிதியை எந்தத் தாமதமுமின்றி உடனடியாக ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. மாநில உயர் நீதிமன்றங்களுடன் ஆலோசித்து பிரத்யேக இடங்களைத் தேர்வு செய்யவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.