புதுடில்லி: தொழிலதிபர் அனில் அம்பானி தலைமையிலான ‘திருபாய் அம்பானி’ குழும நிறுவனங்கள் தொடர்பான பெரிய அளவிலான வங்கி மோசடி குற்றச்சாட்டில் விரிவான, ஆழமான விசாரணை அவசியம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் வங்கிகளுக்கு ரூ.27,337 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தெரிவித்தது.

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஈ.ஏ.எஸ். சர்மா தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரிக்கும் போது இந்த கருத்துகள் முன்வைக்கப்பட்டன. மனுவில் சுமார் ரூ.40,000 கோடி அளவிலான வங்கி மோசடி நடந்ததாக கூறி, நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என கோரப்பட்டது.

மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அனில் அம்பானி ‘மூளையாக’ செயல்பட்டதாக ஒப்புக் கொண்டதாக கூறி, இதுவரை கைது ஏன் இல்லை என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அமர்வு, விசாரணை முகமைகள் கோராத வரை ஒருவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனத் தெரிவித்தது. விசாரணையை பரபரப்பாக்காமல் ஆதாரங்களை திரட்டுவதிலேயே கவனம் இருக்க வேண்டும் என்றும், விசாரணையை தொடர்ந்து கண்காணிப்போம் என்றும் கூறியது.

மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இதுவரை 9 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளன; 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது; 7 வழக்குகளில் விசாரணை தீவிரமாக நடக்கிறது என தெரிவித்தார். 14 இடங்களில் சோதனை நடத்தி 3,960 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், 2 பேர் கைது செய்யப்பட்டதாகவும், வெளிநாடு தப்பிச் செல்லாமல் தடுக்க 31 ‘லுக் அவுட்’ நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறினார். அனில் அம்பானி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தனது வாடிக்கையாளர் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அவர் கூட ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்றும் வாதிட்டார். விசாரணை வெளிப்படையாகவும் நியாயமாகவும் காலதாமதமின்றியும் நடக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி, தொய்வு ஏற்பட்டால் தலையிடுவோம் என எச்சரித்து, வழக்கை ஜூலைக்கு ஒத்திவைத்தது.