சென்னை

சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத சூழலில், அமைய இருக்கும் புதிய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மேலும், இன்னொரு தேர்தலுக்கு வழி வகுக்காமல் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே தனது விருப்பம் என கூறினார்.

தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை தரவில்லை என்றும், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைக்க தேவையான இடங்களை பெறவில்லை என்றாலும் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய அரசு அமைவதற்கு திமுக இடையூறாக இருக்காது; ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் என முன்பே கூறியதை ஸ்டாலின் மீண்டும் நினைவூட்டினார். சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கும் பொறுப்பை தன்னிடம் ஒப்படைத்ததாகவும், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்பதாகவும் கூறினார்.

நெருக்கடியான நிலையைத் தவிர்க்க, கூட்டணிக் கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தாலும், கொள்கை அடிப்படையில் திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்வதாக அறிவித்ததை அவர் வரவேற்றார். அதே நேரத்தில், கூட்டணியின் சார்பில் வென்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அறிவாலயத்திற்கு நன்றி தெரிவிக்க வரவில்லை என்றும், காங்கிரஸ் திமுகவுடனான உறவை முறித்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

சோதனைக் காலத்தில் திமுகவுடன் உறுதியாக நின்ற கூட்டணி இயக்கத் தலைவர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். கடந்த ஐந்தாண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை புதிய அரசு தொடர வேண்டும் என்றும், மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான திட்டங்கள் தொடர்ந்தால் மக்கள் நலனும் மாநில வளர்ச்சியும் உறுதி ஆகும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.