கல்வித் துறையின் தற்போதைய நிலை குறித்து நிடி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில், மாணவர் சேர்க்கை இல்லையெனினும் நிர்வாக ரீதியாக இயங்கி வரும் ‘நிழல்’ பள்ளிகள் குறித்து கவலைக்கிடமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் மட்டும் ஒரு மாணவர் கூட இல்லாமல் 311 பள்ளிகள் செயல்படுவதாகவும், அவற்றில் 432 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.
232 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை, நாடு முழுதும் 7,993 பள்ளிகளில் ஒரு மாணவர் சேர்க்கையும் நடைபெறவில்லை என்றும், இத்தகைய பள்ளிகளில் 20,817 ஆசிரியர்கள் பணியாற்றுவதாகவும் குறிப்பிடுகிறது. மேலும், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கத்தில் மாணவர்களின்றி செயல்படும் பள்ளிகள் அதிகமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறது.
மாணவர்கள் இல்லாத பள்ளிகள் தொடர்வதால் அரசு நிதியும் மனிதவளமும் வீணாகும் அபாயம் இருப்பதாக அறிக்கை எச்சரிக்கிறது. அதே நேரத்தில், நாடு முழுதும் 1,04,125 பள்ளிகள் ஒரே ஆசிரியரை மட்டும் நம்பி இயங்குவதாகவும், போதிய ஆசிரியர்கள் இல்லாததால் 33 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கிறது.
ஆசிரியர் பற்றாக்குறையுடன் சேர்த்து அடிப்படை வசதிகளிலும் குறைபாடுகள் இருப்பதாக அறிக்கை பட்டியலிடுகிறது. 1.19 லட்சம் பள்ளிகளில் இன்னும் மின் வசதி இல்லை; 14,505 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை; 59,829 பள்ளிகளில் மாணவர்கள் கை கழுவுவதற்கான வசதி இல்லை என கூறப்படுகிறது. கழிப்பறை வசதி போதிய அளவில் இல்லாததால் பெண் குழந்தைகள் இடைநிற்றலுக்கு இது முக்கிய காரணமாக மாறியுள்ளதாகவும், புதிய கல்விக் கொள்கையின் கீழ் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 51.7% இடங்களில்தான் அறிவியல் ஆய்வகங்கள் உள்ளன என்றும் குறிப்பிடுகிறது.
ஆசிரியர்களின் தயார்நிலையும் கேள்விக்குறியாக இருப்பதாக அறிக்கை கூறுகிறது. தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் 10–15% பேர் மட்டுமே தேர்ச்சி பெறுவதாகவும், கணிதம், அறிவியல், ஆங்கிலம், ஹிந்தி போன்ற பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களில் பாடத் திறன் முழுமையாக இல்லாத நிலை இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறது. இச்சிக்கல்களுக்கு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால திட்டங்களுடன் 33 செயல்பாட்டு வழிமுறைகளை நிடி ஆயோக் பரிந்துரைத்துள்ளதுடன், மத்திய–மாநில–உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் தீர்வு சாத்தியம் எனவும் எச்சரித்துள்ளது.





