வாஷிங்டன்: உலக நாடுகள் மீது அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த 10% கூடுதல் சுங்க வரியை, அமெரிக்க நீதிமன்றம் மீண்டும் ரத்து செய்து தடுப்பு விதித்துள்ளது. பார்லிமென்ட் (காங்கிரஸ்) ஒப்புதல் இன்றி விதிக்கப்பட்டதால் அந்த வரி செல்லாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற பின்னர், வர்த்தக பற்றாக்குறையை காரணமாகக் காட்டி டிரம்ப் பல நாடுகளுக்கு சுங்க வரிகளை விதித்தார். இதனால் வெளிநாடுகள் மட்டுமல்லாமல் அமெரிக்க வர்த்தக நிறுவனங்களும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு முன், உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் அந்த வரியை ரத்து செய்து, அதிபருக்கு நேரடியாக வரி விதிக்கும் அதிகாரம் இல்லை; காங்கிரஸ் ஒப்புதல் அவசியம் எனத் தெரிவித்திருந்தது. அதனை ஏற்க மறுத்த டிரம்ப், வேறு சட்ட விதிகளை முன்வைத்து மீண்டும் 10% கூடுதல் வரியை அறிவித்தார்.

இந்த புதிய வரியை எதிர்த்து வாஷிங்டன் மாகாணமும், “பர்லாம் அண்டு பேரல்” என்ற மசாலா நிறுவனமும், “பேசிக் பன்” என்ற பொம்பை நிறுவனமும் உள்ளிட்டவை, நியூயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தகம் மற்றும் சுங்கவரி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, 10% கூடுதல் வரியை ரத்து செய்ய உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு வழக்கு தொடர்ந்த மூன்று தரப்பினருக்கே பொருந்தும்; அவர்கள் செலுத்திய வரியை வட்டியுடன் திரும்பப் பெற முடியும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. அமெரிக்க அரசு மேல்முறையீடு செய்யும் வரை, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு வரி விதிப்பு தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.