முதல்வர் பதவி ஏற்கவும், ஆட்சி அமைக்கவும் நீடிக்கும் இழுபறி காரணமாக விஜய் விரக்தியில் இருப்பதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பதவிக்காக யாருக்கும் அடிமையாக இருக்க விரும்பவில்லை; தேவையெனில் மீண்டும் மக்களிடமே திரும்புவேன் என்று அவர் கடுமையாக கூறியதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும் அது குறைந்துவிட்டதாகவும், ஜாதி–மத அரசியல் மற்றும் ஊழலுக்கு எதிரான மனநிலை கொண்ட சிறு கட்சிகள் ஆதரவு தருவார்கள் என எதிர்பார்த்ததாகவும் அவர் கூறியதாக தகவல். கம்யூனிஸ்ட் கட்சிகள் பதவியை எதிர்பார்க்காமல் ஆதரவு தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், ஆதரவு தருவதாக முன்பு கூறிய திருமாவளவன் நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை முன்வைக்கிறார்; மேலும் ஸ்டாலின் ஆலோசனை கேட்டு செயல்படுகிறார் என விஜய் ஆதங்கம் வெளியிட்டதாக தவெக வட்டாரங்கள் கூறுகின்றன. மக்கள் தீர்ப்புக்கு எதிராக அனைவரும் தன்னை எதிர்த்து அணிதிரள்வார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறியதாக தகவல்.

இதற்கிடையில், ஆலோசகர்கள் அவசர முடிவு எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதாகவும், சட்டரீதியான வழிகள் உள்ளிட்ட பல தேர்வுகள் உள்ளன; பிற கட்சிகளிலிருந்தும் வெளிப்புற ஆதரவு கிடைக்கலாம் என அவர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. வாக்குகளை வீணாக்காமல், எதிர்ப்பாளர்கள் பயன்படுத்தக்கூடிய வெற்றிடத்தை உருவாக்க வேண்டாம் என்றும் அவர்கள் எச்சரித்ததாக தகவல்.

கடைசி தகவலாக, விஜய் ஆட்சி அமைக்க திருமாவளவன் ஆதரவு கடிதம் அளித்துள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் நீடித்த இழுபறி முடிவுக்கு வந்ததாகவும், இனி ஆட்சி அமைப்பதில் சிரமம் இருக்காது என கட்சி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.