சென்னை: கவர்னர் அர்லேக்கர் இன்று இரவு 7.10 மணிக்கு திருவனந்தபுரம் புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றதாகவும், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியமைக்கத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விசிக தலைவர் திருமாவளவன், விஜய் முதல்வராக பதவியேற்க ஆதரவு அளிப்பதாக இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், 2 எம்எல்ஏக்களை கொண்டுள்ள முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவை தெரிவித்துள்ளது. இதனால் விஜய்க்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.
கவர்னர் அர்லேக்கர் கேரள கவர்னராகவும் பொறுப்பு வகிப்பதால், அங்குள்ள அலுவல் பணிகளை மேற்கொள்ளவே அவர் கேரளா புறப்படுவதாக கூறப்படுகிறது.
கவர்னர் புறப்படுவதற்கு முன், விசிக மற்றும் முஸ்லிம் லீக் ஆதரவு கடிதங்களுடன் அவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக கவர்னரை சந்திக்க அவர் நேரம் கேட்டுள்ளார்.





