சட்டசபையில் போதிய பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கூறும் தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவர் விஜய்க்கு, ஆட்சி அமைக்க கவர்னரிடமிருந்து இதுவரை அழைப்பு வரவில்லை.
சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 எம்எல்ஏக்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி மற்றும் தலா 2 எம்எல்ஏக்கள் கொண்ட இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு கடிதங்களை வழங்கியுள்ளன. ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), இன்னும் அதிகாரப்பூர்வ ஆதரவு கடிதம் வழங்கவில்லை.
இந்நிலையில், இன்று மூன்றாவது முறையாக கவர்னரை சந்தித்த விஜய், தமக்கு கிடைத்த ஆதரவு கடிதங்களை வழங்கினார். அவற்றின் அடிப்படையில் ராஜ்பவனில் இருந்து ஆட்சி அமைக்க அழைப்பு வரும் என தவெக தரப்பில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆனால் தற்போது வரை அழைப்பு வராததால், விசிக ஆதரவு கடிதம் கிடைத்த பிறகே கவர்னர் முடிவு எடுப்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விஜய் எப்போது ஆட்சி அமைக்க அழைக்கப்படுவார், எப்போது முதல்வராக பதவியேற்பார் என்பதில் நிச்சயமற்ற நிலை தொடர்கிறது.





