சிபிஐ(எம்) பொதுச்செயலர் எம்.ஏ. பேபி, தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவர் விஜய் மதவாத சக்திகளுக்கு எதிராக செயல்படுவார் என்ற உறுதியான நம்பிக்கையால் தான் அவருக்கு ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் வி.சி.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஆலோசித்து, த.வெ.க-க்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்ததாக கூறினார்.

இந்த முடிவை தி.மு.க தலைமையிடம் ஏற்கெனவே தெரிவித்துவிட்டதாகவும், இதில் முடிவெடுக்க சிபிஐ(எம்) மற்றும் வி.சி.க-க்கு சுதந்திரம் இருப்பதாக தி.மு.க தலைமை தெரிவித்ததாகவும் பேபி கூறினார். தி.மு.க-வுடன் நட்புறவு தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மக்கள் தீர்ப்புக்கு எதிராக பின்வாசல் வழியாக அதிகாரத்தை கைப்பற்ற பா.ஜ.க முயற்சிப்பதாகவும், அதற்கேற்ப ஆளுநர் செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். குதிரை பேரத்திற்கு தாங்கள் எதிரானவர்கள் என்றும், தமிழகத்தில் குதிரை பேரம் நடக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுவதற்கு ஆளுநரின் தாமதமே காரணம் என்றும் பேபி தெரிவித்தார்.