அதிமுகவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் தலைமை மாற்றம் தொடர்பான முடிவுகளைப் பற்றி பேச, பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) இன்று தனது இல்லத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக மூன்றாம் இடம் பெற்ற நிலையில், கட்சிக்குள் கருத்து மோதல் தீவிரமடைந்துள்ளது. கட்சி சார்பில் வெற்றி பெற்ற 47 எம்.எல்.ஏ.க்களில் பெரும்பகுதியினர், நேற்று சி.வி. சண்முகம் கூட்டிய எதிர்ப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இபிஎஸ் தலைமையில் தொடர்ந்து இரண்டு சட்டசபை தேர்தல்களில் தோல்வி ஏற்பட்டதாகக் கூறி, இனி கட்சியை தாங்களே வழிநடத்த வேண்டும் என்றும், இபிஎஸ் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக, கட்சியின் சட்டசபை குழுத் தலைவர் தேர்வும் இன்னும் முடிவாகவில்லை.

இபிஎஸ் மீண்டும் சட்டசபை குழுத் தலைவராக வருவதற்கு சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இபிஎஸ் ஆலோசனைக்குப் பிறகு, மாவட்ட செயலாளர்கள் இன்று மதியம் எம்.ஆர்.சி நகரில் வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை சந்தித்து பேசினர்.

தீர்வு எதுவும் ஏற்படாவிட்டால், நாளை நடைபெற உள்ள எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்வில் அதிமுகவின் உள்பிளவு வெளிப்படையாகத் தெரியும் என கட்சியினர் அஞ்சுகின்றனர்.