சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டசபைத் தொகுதியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் பெரியகருப்பன் அளித்த புகாருக்கு தேர்தல் கமிஷன் ஏன் பதிலளிக்கவில்லை என்பது குறித்து மே 11 அன்று அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய சட்டசபைத் தேர்தலில், அந்தத் தொகுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பெரியகருப்பன் இரண்டாம் இடம் பிடித்த நிலையில், இருவருக்கிடையேயான வெற்றி வித்தியாசம் ஒரு ஓட்டு மட்டுமே என தெரிவிக்கப்பட்டது. தேர்தல் கமிஷன் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்து வெற்றிச் சான்றிதழும் வழங்கியது.
இந்த முடிவை எதிர்த்து பெரியகருப்பன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கான தபால் ஓட்டு, திருப்பத்தூர் மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதிக்கு தவறாக அனுப்பப்பட்டதாக கூறி, அந்த ஓட்டை தாம் போட்டியிட்ட தொகுதி கணக்கில் சேர்க்க வேண்டும் என கோரப்பட்டது. மேலும், விவகாரம் முடிவுக்கு வரும் வரை சீனிவாச சேதுபதி சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
விடுமுறை கால அமர்வில் நீதிபதிகள் எல். விக்டோரியா கவுரி, என். செந்தில்குமார் ஆகியோர் இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்தனர். இத்தகைய சூழ்நிலைகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தேர்தல் கமிஷனால் வரையறுக்கப்பட்டுள்ளதா என்றும், மனுதாரர் புகாருக்கு பதிலளிக்காததற்கான காரணம் என்ன என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி, தலைமை தேர்தல் அதிகாரி மே 11 அன்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.





