தமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் (தனி) தொகுதி எம்எல்ஏ கருப்பையா பொறுப்பேற்றார். சனிக்கிழமை மாலை கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் அர்லேக்கர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய முதல்வராக இன்று பதவியேற்ற தவெக தலைவர் விஜய், மே 13-க்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் கெடு விதித்துள்ளார். நடைமுறைப்படி, தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்க வேண்டும்.

இதன்படி சட்டசபை மே 11 காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அப்போது புதிய எம்எல்ஏக்கள் கருப்பையா முன்னிலையில் பதவியேற்பர். அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நடவடிக்கைகளையும் கருப்பையா தலைமையில் நடத்தப்பட உள்ளது.

மே 12 அன்று புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார். அதன் பின்னர் புதிய அரசு சட்டசபை தரையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியிருக்கும்.

கருப்பையா 2011 சட்டசபை தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இம்முறை தவெக சார்பில் வெற்றி பெற்று சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டசபைக்குள் வந்துள்ள நிலையில், அவருக்கு தற்காலிக சபாநாயகர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் முதல்வர் விஜய், அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, முதல்வரின் செயலர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் செந்தில்குமார் மற்றும் லட்சுமிபிரியா நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சுகாதாரத்துறை செயலராக உள்ள செந்தில்குமார் முதல்வரின் கூடுதல் தலைமை செயலராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை செயலராக இருந்த லட்சுமிபிரியா முதல்வரின் தனிச் செயலராகவும் ஓராண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.