திருவனந்தபுரம்: கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையை கைப்பற்றியுள்ளது. ஆனால் முதல்வர் யார் என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு வெளியாகவில்லை.

எம்.எல்.ஏ.க்களின் கருத்து கேட்கப்பட்டதாக கூறப்பட்டாலும், நடைமுறையில் கட்சியின் மேலிடத் தலைமையே முடிவெடுப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரசில் லோக்சபா எம்.பி. கே.சி.வேணுகோபால் முக்கியமான, செல்வாக்கு கொண்ட தலைவராக பார்க்கப்படுகிறார்; ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. கூட்டணி 102 தொகுதிகளில் வென்றதில் காங்கிரஸ் 63 இடங்களை பெற்றுள்ளது; இதில் சுமார் 40 எம்.எல்.ஏ.க்கள் வேணுகோபாலுக்கு ஆதரவாக உள்ளதாக தகவல்.

சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீஷனும் முதல்வர் போட்டியில் உள்ளார். வெற்றிக்கு அவரது தலைமையே காரணம் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர். ரமேஷ் சென்னிதலா பெயரும் பட்டியலில் பேசப்பட்டாலும், அவருக்கு வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.

ராகுல் காந்தி வேணுகோபாலையே முன்னிலைப்படுத்தலாம் என்ற தகவலால், சதீஷன் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், இரு தரப்பினரிடையே சில இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. டெல்லி காங்கிரஸ் வட்டாரங்களில் வேணுகோபாலுக்கே அதிக வாய்ப்பு என பேசப்படுகிறது.