கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் தோல்வியடைந்த பின்னர், எக்ஸ் சமூக ஊடகத்தில் திரிணமுல் தலைவர் மம்தா பானர்ஜி தன் சுயவிபர குறிப்பை மாற்றிய விதம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தின் 294 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 293 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், முறைகேடு புகார்களைத் தொடர்ந்து பால்டா தொகுதியில் வரும் 21-ம் தேதி மறு தேர்தல் நடைபெறுகிறது.

4-ம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில், அறிவிக்கப்பட்ட 293 தொகுதிகளில் பா.ஜ.க. 207 இடங்களில் வென்று மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றியது. திரிணமுல் காங்கிரஸ் 80 இடங்களை மட்டுமே பெற்றது; மம்தா பானர்ஜி தன் சொந்த பவானிபூர் தொகுதியிலேயே தோல்வியடைந்தார்.

தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்த மம்தா, தேர்தலில் சதி நடந்ததாக குற்றஞ்சாட்டினார். மேலும், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, அவர் ராஜினாமா செய்யாததால் அதிருப்தியடைந்த கவர்னர் ரவி, அமைச்சரவையை கலைக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. பா.ஜ.க. சார்பில் சுவேந்து அதிகாரி நேற்று முதல்வராக பதவியேற்றார்.

இந்த சூழலில், மம்தா எக்ஸில் புதுப்பித்த சுயவிபரத்தில் தன்னை “15, 16 மற்றும் 17-வது சட்டசபைகளின் முதல்வர்” என குறிப்பிட்டு, ‘முன்னாள் முதல்வர்’ என்ற சொல்லை பயன்படுத்தாமல் விட்டுள்ளார். அதே நேரத்தில், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் என்றும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளது.