பெங்களூருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, “காங்கிரசுக்கு துரோகம் செய்ய மட்டுமே தெரியும்; அரசியல் காற்று மாறினால் நிலைப்பாடும் மாறும்” என குற்றம்சாட்டினார்.

தமிழக வெற்றிக்கழகத்துடனான கூட்டணி தொடர்பாக பேசும்போது, மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சி நீடிக்க உதவிய திமுகவின் “முதுகில் காங்கிரஸ் குத்திவிட்டது” என்று அவர் கூறினார். அதிகாரத்திற்காக திமுகவை விட்டு விலகி, “யார் முதுகில் ஏறி பயணம் செய்யலாம்” என்பதை பார்த்து கூட்டணியை மாற்றியதாகவும் அவர் விமர்சித்தார்.

மேலும், போலி வாக்குறுதிகள் மற்றும் மோசமான நிர்வாகம் காரணமாக காங்கிரஸ் நாடு முழுவதும் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், காங்கிரஸ் அரசு அமைந்த சில மாதங்களிலேயே எதிர்ப்பு அலை தொடங்கிவிடும் என்றும் மோடி கூறினார். எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சிக்கு வர முடியவில்லை என்றும் அவர் வாதிட்டார்.

தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் நீதிமன்றங்கள் மற்றும் விசாரணை அமைப்புகள் மீது பழி சுமத்துகின்றன என்றும், அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம், நீதித்துறை மீது வெறுப்பை காட்டுகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

பாஜக வளர்ச்சியை எடுத்துக்காட்டிய மோடி, மேற்குவங்கத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 3 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 200 ஆக உயர்ந்துள்ளதாகவும், கேரளாவிலும் 3 எம்எல்ஏக்கள் உள்ளதாகவும் கூறினார். கேரளாவில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையை கடக்கும் நாள் “வெகு தொலைவில் இல்லை” என்றும், காங்கிரஸ் தலைமையிலான அரசுகள் நிலைத்தவை அல்ல என்றும், கர்நாடக அரசின் நிலைத்தன்மை குறித்தும் அவர் விமர்சனம் செய்தார்.