வீட்டு வாடிக்கையாளர்களுக்கு சமையல் எல்பிஜி சிலிண்டர்களை தாமதமின்றி வழங்க வேண்டும்; விதிமீறல்கள் நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் காஸ் ஏஜென்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.2 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சிலிண்டர்களை வழங்கி வருகின்றன.
எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட போர் சூழல் காரணமாக கடந்த மார்ச்சில் பாதிக்கப்பட்ட சிலிண்டர் வினியோகம் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்தார். வீட்டு பிரிவில் தடையின்றி 100% வினியோகம் நடைபெறுவதுடன், வணிகப் பிரிவில் சுமார் 70% அளவில் வழங்கப்படுகிறது என்றார்.
இதனால், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு தாமதமின்றி சிலிண்டர் வழங்க ஏஜென்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனையைத் தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
நாடு முழுவதும் விதிமீறலில் ஈடுபட்ட 76 ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் தமிழகத்தில் இரண்டு ஏஜென்சிகளும் உள்ளதாகவும் கூறப்பட்டது. வீடுகளுக்கு வினியோகம் செய்யும் போது 95% அளவில் ரகசிய குறியீடு முறையில் உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதை விரைவில் 100% ஆக உயர்த்த திட்டமுள்ளதாகவும் அதிகாரி தெரிவித்தார்.





