மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் சாய் பாகீரத் மீது, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறி ஹைதராபாத் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

செய்தி குறிப்பின்படி, சிறுமிக்கும் பாகீரத்துக்கும் நட்பு ரீதியான பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் தாயார் ஹைதராபாத் போலீசில் புகார் அளித்து, தனது மகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாக தெரிவித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரம் பரவலான கவனத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், பாகீரத் சார்பில் கரீம்நகர் போலீசில் எதிர்புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், சிறுமியின் பெற்றோர் திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும், மறுத்ததால் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அச்சத்தில் ரூ.50,000 வழங்கிய பின்னரும் ரூ.5 கோடி கேட்டு மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.

எதிர்புகாரின் அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இரு தரப்பு புகார்களையும் போலீசார் விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.