தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றதையடுத்து, முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பதவியேற்றதும் விஜய் கையெழுத்திட்ட அறிவிப்புகளையும் அவர் வரவேற்றார்.
அரசிடம் பணம் இல்லை என்று சொல்லி தொடங்க வேண்டாம் என ஸ்டாலின் அறிவுறுத்தினார். மக்களுக்கு வழங்க மனமும், அதை செயல்படுத்தும் ஆட்சித் திறமையும் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தன் ஆட்சிக்காலத்தில் கோவிட், வெள்ளம் போன்ற சவால்களையும், மத்திய பாஜ அரசு ஓரவஞ்சனை செய்ததாகக் கூறிய சூழலையும் சமாளித்தபடியே பல மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றியதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், ‘ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றது கடந்த அரசு’ என்ற விஜயின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஸ்டாலின், தமிழகத்தின் கடன் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் தான் இருப்பதாக கூறினார். தமிழக அரசின் நிதிநிலை குறித்து கடந்த பிப்ரவரி பட்ஜெட்டிலேயே தெளிவாக விளக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
வாக்குறுதிகளை அளித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்ப வேண்டாம் என்றும், நடைமுறைக்கு சாத்தியமானவற்றை நிறைவேற்றும் வழிமுறைகளை விரைவில் கற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன் என்றும் ஸ்டாலின் கூறினார். தமிழக வளர்ச்சிப் பயணம் தொடர வாழ்த்துகள் என்றும் அவர் தெரிவித்தார்.





