தமிழக அமைச்சரவையில் இன்று விஜயுடன் சேர்த்து 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். வெளியிடப்பட்ட சுருக்கமான பயோ டேட்டாவில், அனுபவமிக்க சட்டமன்ற உறுப்பினர்களும் தொழில்முறை பின்னணியிலிருந்து வந்த புதிய முகங்களும் இடம்பெற்றுள்ளனர்.

புதுச்சேரியைச் சேர்ந்த ஆனந்த், ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்தவர். முன்னாள் அமைச்சர் அஷ்ரப்பிடம் உதவியாளராக பணியாற்றியதுடன், விஜய் ரசிகர் மன்றத் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். கட்சி தொடங்கியதிலிருந்து பொதுச்செயலாளராக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள அவர், கல்வித்தகுதி 9ஆம் வகுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இப்போது 10வது முறையாக சட்டசபைக்கு தேர்வாகியுள்ளார். எம்ஜிஆர் காலத்திலிருந்து அரசியலில் உள்ளவர் எனவும், ஜெயலலிதா மற்றும் இபிஎஸ் அமைச்சரவைகளில் பணியாற்றியவர் எனவும் கூறப்பட்டுள்ளது. வனம், போக்குவரத்து, விவசாயம், கல்வி உள்ளிட்ட துறைகளை கவனித்த அனுபவம் கொண்ட இவர், தேர்தலுக்கு முன் விஜய் கட்சியில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது; கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு.

புதிய அமைச்சர்களில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அருண்ராஜ் மருத்துவர். சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்து கிராமப்புற மருத்துவராக பணியாற்றியதுடன், சிவில் சர்வீசஸ் தேர்வில் வென்று வருமான வரித்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர்; விருப்ப ஓய்வு பெற்று திருச்செங்கோடு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். சென்னையைச் சேர்ந்த வெங்கட்ரமணன் ஆடிட்டர்; எம்.காம்., எம்பிஏ (நிதி) முடித்தவர். மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், விஜயின் நிதி தொடர்பான பணிகளை நீண்ட காலமாக கவனிப்பதாகவும், கட்சியின் பொருளாளராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்வான நிர்மல்குமார் (பிஇ, எல்எல்பி, எம்.ஏ) தொடக்கத்தில் பாஜகவிலும் பின்னர் அதிமுகவிலும் இருந்து, இரு கட்சிகளின் ஐடி விங் செயல்பாடுகளில் பங்களித்ததாக கூறப்படுகிறது; பின்னர் விஜய் கட்சியில் இணைந்து முக்கிய தலைவர்களில் ஒருவராக மாறியுள்ளார். எழும்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற ராஜ்மோகன் (பி.டெக்) பேச்சுத்திறமை கொண்டவர்; யூடியூப் தளங்கள் மூலம் பிரபலமானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி தொகுதியில் வென்ற பிரபு பல் மருத்துவர்; சமூக சேவை மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகம் பெற்றவர். சிவகாசி தொகுதியில் தேர்வான கீர்த்தனா (எம்.எஸ்சி., புள்ளியியல்) தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகள் பேசக்கூடியவர் என கூறப்பட்டுள்ளது. வில்லிவாக்கம் தொகுதியில் வென்ற ஆதவ் அர்ஜூனா, முன்பு விசிகவில் இருந்தவர்; கட்சி கட்டுப்பாட்டை மீறி பேசியதற்காக நடவடிக்கைக்கு ஆளான பின்னர் விஜய் கட்சியில் இணைந்ததாகவும், “வாய்ஸ் ஆப் காமன்ஸ்” என்ற தேர்தல் உத்தி வகுக்கும் நிறுவனத்தை நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.