சென்னை: அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைகளில் “இலகு பணி” என வழங்கப்பட்ட பணிகளில் இருந்த சுமார் 3,000 ஊழியர்கள் மீண்டும் வழக்கமான ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்களில் தினமும் 20,000க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 330 பணிமனைகளில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், மெக்கானிக்கல் பிரிவு பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 1.21 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.

ஊழியர்கள் கூறுகையில், மருத்துவ காரணங்களால் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டுப்பாட்டு அறை, டிக்கெட் பிரிவு, பணப்பிரிவு போன்ற இடங்களில் இலகு பணிகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் போக்குவரத்துத் துறையில் ஆளும் கட்சியுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களின் ஆதிக்கம் காரணமாக, இத்தகைய பணிகளில் சிலர் அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

தற்போது அரசியல் சூழல் மாற்றம் மற்றும் புதிய ஆட்சி அமைவதற்கான நிலை காரணமாக, இலகு பணியில் இருந்தவர்கள் மீண்டும் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 30% காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் பேருந்துகள் முழு அளவில் இயக்கப்படவில்லை என்றும் ஊழியர்கள் சுட்டிக்காட்டினர்.

உண்மையில் இலகு பணி தேவைப்படுவோருக்கு மட்டும், உரிய மருத்துவச் சான்றிதழின் அடிப்படையில், தொழிற்சங்க பேதமின்றி கட்டுப்பாட்டு அறை, டிக்கெட், கேஷ் செக்ஷன் உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.