வாஷிங்டன்: ரஷ்யா மற்றும் உக்ரைன் மூன்று நாள் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா–உக்ரைன் இடையிலான போர் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. ரஷ்யாவில் மே 9 அன்று கொண்டாடப்படும் ‘வெற்றி தின’ நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னிட்டு இந்த இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக டிரம்ப் குறிப்பிட்டார். இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியை சோவியத் யூனியன் தோற்கடித்ததை நினைவுகூரும் நாளாக மே 9 கொண்டாடப்படுகிறது.
மே 9 முதல் மே 11 வரை மூன்று நாட்களுக்கு போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என அவர் கூறினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோரிடம் நேரடியாக தொடர்பு கொண்டு தற்காலிகமாக தாக்குதல்களை நிறுத்துமாறு தனிப்பட்ட முறையில் கேட்டதாகவும், அதற்கு இருவரும் சம்மதித்ததாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
இது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகப்பெரிய மோதலை முடிவுக்கு கொண்டு செல்லும் முயற்சியின் தொடக்கமாக இருக்கலாம் என அவர் கூறினார். மேலும், இந்த போர் நிறுத்தத்தின் வாயிலாக இரு தரப்பும் தலா 1,000 கைதிகளை விடுவிக்கும் பரஸ்பர கைதிகள் பரிமாற்றம் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





