வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசிய பிரார்த்தனை தினத்தை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில், இந்திய வேத மந்திரங்கள் முழங்கின.
ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தின் முதல் வியாழக்கிழமை அமெரிக்காவில் தேசிய பிரார்த்தனை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 75-வது ஆண்டு விழா, “தேசங்களுக்கு இடையே இறைவனை போற்றுவோம்; தலைமுறைகள் கடந்து அவரைத் தேடுவோம்” என்ற கருப்பொருளில் நடைபெற்றது.
நியூஜெர்சி மாநிலம் ராபின்ஸ்வில்லில் உள்ள புகழ்பெற்ற பி.ஏ.பி.எஸ். சுவாமி நாராயண் கோவிலைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் அவர்கள் யஜுர் வேதத்தில் உள்ள ‘சாந்தி பாத்’ ஸ்லோகங்களை ராகத்துடன் பாடினர். மந்திரங்கள் ஒலித்தபோது வெள்ளை மாளிகை அமைதியான, தியானமயமான சூழலுக்கு மாறியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வை வரலாற்று சிறப்புமிக்க தருணம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டியதாக செய்திகள் கூறுகின்றன.





