சென்னை: இன்று (மே 11) முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து உரையாடினார்.

இந்த சந்திப்பு, முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற முதல் சட்டசபை கூட்டத்தொடருக்குப் பிறகு நடைபெற்றது. அந்த கூட்டத்தொடரில் முதல்வர் உள்ளிட்ட புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எம்எல்ஏக்களாக பதவியேற்றனர்.

ஸ்டாலின் இல்லத்திற்கு விஜய் சென்றபோது, உதயநிதி வாசலில் வரவேற்றார். வீட்டுக்குள் ஸ்டாலின் முதல்வரை வரவேற்று பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்; பதிலுக்கு விஜயும் ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தினார். பின்னர் ஸ்டாலின், விஜய், உதயநிதி, ஆனந்த் ஆகியோர் சிறிது நேரம் உரையாடினர். முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, எம்.ஆர்கே பன்னீர்செல்வம், மகேஷ் உள்ளிட்டோர் அங்கு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அண்ணாநகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் இல்லத்திற்கும் விஜய் சென்றார். வாசலில் துரை வைகோ பொன்னாடை அணிவித்து வரவேற்றார். வைகோவும் முதல்வருடன் சற்று நேரம் மகிழ்ச்சியுடன் உரையாடினார்; குடும்பத்தினர், உறவினர்கள், கட்சியினர் மற்றும் வீட்டு பணியாளர்கள் முதல்வருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவர்களை வைகோ முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

முதல்வர் விஜய் சந்திப்பு குறித்து ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய் “அரசியல் நாகரிகத்துடன்” தன்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும், தாம் அன்புநிறை வாழ்த்துகளும் ஆலோசனைகளும் வழங்கியதாகவும் தெரிவித்தார்.