தபால் ஓட்டுகள் தவறாக வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டதாக கூறி, தி.மு.க. வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன் அனுப்பிய புகாருக்கு தேர்தல் கமிஷன் பதில் அளிக்காதது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தலில் பெரியகருப்பன் 83,364 ஓட்டுகளும், எதிரணி வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,365 ஓட்டுகளும் பெற்றதாக குறிப்பிடப்பட்டது. ஒரு ஓட்டு வித்தியாசத்தில் சேதுபதி வென்றதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதையடுத்து, 17வது சட்டமன்ற நடவடிக்கைகளில் சீனிவாச சேதுபதி பங்கேற்பதைத் தடை செய்ய இடைக்கால உத்தரவு கோரி பெரியகருப்பன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். 58ம் எண் திருப்பத்தூர் தொகுதிக்குரிய தபால் ஓட்டுகள் தவறுதலாக 50ம் எண் திருப்பத்தூர் தொகுதிக்கு சென்றதாகவும், அவற்றை மீட்டு சரியான தொகுதி கணக்கில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரினார்.
பெரியகருப்பன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், அந்த தபால் ஓட்டுகள் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டதாகவும், அவை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கே அனுப்பப்பட வேண்டியதாகவும் வாதிட்டனர். இதுபோன்ற சூழலில் பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து தேர்தல் கமிஷன் விதிமுறைகள் உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்; தேர்தல் கமிஷன் தரப்பில், தபால் ஓட்டுகள் வேறு தொகுதிக்கு மாற்றி அனுப்பப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும், தேர்தல் வழக்கு தாக்கல் செய்யும் வரை ஆவணங்கள் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஒரு ஓட்டாக இருந்தாலும் புகாருக்கு பதில் அளிப்பது தேர்தல் கமிஷனின் கடமை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், புகாருக்கு பதில் தராத காரணங்களை விளக்கி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இன்று ஒத்திவைத்தனர்.





