சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகராக தவெக எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வாக உள்ளார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே 12ல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ள நிலையில், கட்சித் தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் இன்று சட்டசபை கூடியது; புதிய எம்எல்ஏக்களுக்கு அவர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் மே 12ல் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆளும் தவெக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் இன்று சபாநாயகர் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.
இன்று மாலையுடன் வேட்புமனு தாக்கலுக்கான நேரம் முடிவடைந்த நிலையில், வேறு எந்த வேட்பாளரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் போட்டியின்றி தேர்வாக உள்ளார்; முறைப்படி நாளை அறிவிப்பு வெளியிடப்படும்.
இதுபோலவே, துணை சபாநாயகராக துறையூர் தவெக எம்எல்ஏ ரவிசங்கரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பும் மே 12ல் வெளியாகும்.





