கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்றாலும், முதல்வர் யார் என்ற முடிவை எடுக்க முடியாமல் கட்சி மேலிடம் திணறி வருகிறது. மூத்த தலைவர்களின் ஆதரவுக் குழுக்கள் தனித்தனியாக அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
140 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யூடிஎஃப்) 102 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் மட்டும் 63 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், ஆளுங்கட்சியாக இருந்த இடது ஜனநாயக முன்னணி 35 இடங்களுக்கு சுருங்கியுள்ளது.
முதல்வர் பதவிக்கான போட்டியில் கே.சி.வேணுகோபால், வி.டி.சதீஷன், ரமேஷ் சென்னிதலா ஆகியோர் முன்னணியில் உள்ளனர். ஆதரவாளர்கள் போஸ்டர்கள், சமூக வலைதள பதிவுகள் மூலம் ஆதரவை வெளிப்படுத்தி வரும் நிலையில், சென்னிதலா சீனியாரிட்டி அடிப்படையில் தன்னை தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்; வேணுகோபால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோரின் ஆதரவு தன்னிடம் இருப்பதாக கூறி அழுத்தம் கொடுக்கிறார்.
மறுபுறம், தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்த விதம், மக்களின் ஆதரவு, மதச்சார்பற்ற நிலைப்பாடு ஆகிய காரணங்களை முன்வைத்து சதீஷனும் முதல்வர் பதவியை கோருகிறார். இதனால் முடிவெடுக்க முடியாத சூழலில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டில்லியில் நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் சுமார் மூன்று மணி நேரம் நீடித்தாலும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
முதல்வர் யார் என்பது உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும், மே 23 வரை அவகாசம் இருப்பதாகவும் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் கேரளாவில் பெரிய வெற்றிக்குப் பிறகு உட்கட்சி பூசல்கள் ஏற்பட்ட அனுபவங்களை நினைவில் கொண்டு, இம்முறை ஒருமனதாக முடிவெடுக்க மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது.





