தமிழக முதல்வராக சி.ஜோசப் விஜய் பொறுப்பேற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்றும், மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக மத்திய அரசு தமிழக அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும் என்றும் அவர் கூறினார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விஜய் தலைமையிலான புதிய அரசு மக்கள் நலன், சமூக நீதி, வளர்ச்சி ஆகியவற்றை முன்னிறுத்தி நல்லாட்சியை வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். மக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஆட்சி அமைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து, காமராஜர் மற்றும் மூப்பனார் வழிகாட்டிய “வளமான தமிழகம்; வலிமையான பாரதம்” என்ற நோக்கத்திற்கு ஏற்ப ஆட்சி நடத்த வேண்டும் என வாழ்த்தினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பெ.சண்முகம், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்றார். 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு ஏற்கனவே உள்ள 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என்ற அறிவிப்பையும் அவர் பாராட்டினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் மு.வீரபாண்டியன், தமிழகத்தின் மத சார்பற்ற “வேற்றுமையில் ஒற்றுமை” பண்பை காக்கும் வகையில் மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்றார். மத்திய அரசின் அதிகார குவிப்புக்கு எதிராக மாநில உரிமைகளை நிலைநாட்டும் அரசாக புதிய அரசு அமைய வேண்டும் என்றும், முந்தைய அரசின் நலத்திட்டங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.





