ஒராண்டு காலத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம்; அதேபோல் வெளிநாட்டு சுற்றுலாவையும் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைத்து, பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மாநாடு மூலம் உரையாற்றிய அவர், மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களை தேவைக்கேற்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார். இதனால் அன்னிய செலாவணியை சேமிக்க முடியும்; போர் காரணமாக ஏற்படும் பாதகமான விளைவுகளையும் குறைக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
சூரிய ஆற்றல் துறையில் இந்தியா முன்னணி நாடுகளின் வரிசையில் இடம்பிடித்துள்ளதாகவும், பெட்ரோல்-எத்தனால் கலப்பு திட்டத்தில் பணிகள் வேகமடைந்துள்ளதாகவும் மோடி கூறினார். சமையல் எரிவாயு இணைப்புகளை விரிவுபடுத்தியதுடன், குழாய் வழி எரிவாயு விநியோகம் மற்றும் சி.என்.ஜி. அமைப்புகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் ரூ.9,400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். ஹைதராபாத்–பணஜி பொருளாதார வழித்தடத்தில் குடேபெல்லூர் முதல் மஹபூப்நகர் வரை தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் திட்டம் மற்றும் சங்காரெட்டி மாவட்டத்தில் அமைய உள்ள ஜஹீராபாத் தொழிற்பேட்டை உள்ளிட்ட திட்டங்கள் இதில் இடம்பெற்றன.
மேலும், காசிபேட்–விஜயவாடா ரயில் திட்டத்தின் பல்வேறு பிரிவுகள், ஹைதராபாத்தில் க்ரீன்பீல்டு பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் முனையம், காசிபேட் ரயில் மேம்பாலம் ஆகியவற்றை அவர் தொடங்கி வைத்தார். வாரங்கலில் பிரதமர் மித்ரா பூங்காவும் தொடக்கி வைக்கப்பட்டது. தெலுங்கானா கவர்னர் ஜிஷ்ணு தேவ் வர்மா மற்றும் முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





