உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை பணிய வைக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்தார். தேசிய நலன் முதன்மையாக இருக்கும் போது, எந்த அழுத்தமும் நாட்டின் உறுதியை அசைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
குஜராத்தில் சோமநாதர் கோயிலின் 75வது ஆண்டு மகோத்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இந்தக் கருத்துகளை வெளியிட்டார். தேச நலனே முன்னிலை என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக நிற்கும் என அவர் வலியுறுத்தினார்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் உலகளாவிய அழுத்தங்கள் இருந்தபோதும் இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததாக மோடி நினைவூட்டினார். இது தேசிய நலன் எப்போதும் முதன்மை என்பதைக் காட்டுகிறது என்றார்.
சோமநாதர் விழா ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல; அடுத்த 1,000 ஆண்டுகளுக்கான இந்தியாவின் ஊக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றதையும், 1951ல் கோயிலின் கும்பாபிஷேகம் இந்தியாவின் சுதந்திர உணர்வை உலகிற்கு அறிவித்ததையும் அவர் குறிப்பிட்டார். சூறையாடியவர்கள் ஆலயத்தின் பெருமையை அழிக்க முயன்றாலும், இடிக்கப்பட்ட போதெல்லாம் அது மீண்டும் கட்டமைக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
மேலும், இந்தியாவில் பாரம்பரியமும் நவீனத்துவமும் பிரிக்க முடியாதவை; இரண்டும் கைகோர்த்து பயணிக்கின்றன என்று மோடி தெரிவித்தார். மே 11 தேதி முக்கியத்துவம் வாய்ந்தது; 1998ல் இதே நாளில் இந்தியா தனது முதல் மூன்று அணு ஆயுதச் சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியதாகவும் அவர் நினைவூட்டினார்.





