தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கியூ மணிவண்ணன், ஸ்காட்லாந்து பார்லிமென்டின் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், அந்நாட்டு பார்லிமென்டில் பாலின அடையாளமில்லாத (நான்-பைனரி) முதல் உறுப்பினர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ஸ்காட்லாந்தில் சமீபத்தில் நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில், ஸ்காட்டிஷ் கிரீன்ஸ் கட்சி சார்பில் எடின்பர்க் மற்றும் லோதியன்ஸ் கிழக்கு தொகுதியில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தன்னை ‘நான்-பைனரி’ என வெளிப்படையாக குறிப்பிடும் அடையாளத்துடன் களமிறங்கிய மணிவண்ணனின் வெற்றி, அந்நாட்டு அரசியலில் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
மேலும், குறுகிய கால விசாவில் உள்ள வெளிநாட்டினரும் காலவரையற்ற வசிப்பிட அனுமதி அல்லது நிரந்தர குடியுரிமை இல்லாமலேயே தேர்தலில் போட்டியிட முடியும் வகையில் சமீபத்தில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது. அதன்படியே மணிவண்ணன் இந்தத் தேர்தலில் போட்டியிட முடிந்தது.
2021ஆம் ஆண்டு ஸ்காட்லாந்துக்கு குடிபெயர்ந்த அவர், விளிம்புநிலை மக்கள், அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் நலன்களுக்காகக் குரல் கொடுப்பதே தன் நோக்கம் என தெரிவித்துள்ளார்.





