ரஷ்யா–உக்ரைன் இடையிலான அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை மூன்றாவது நாட்டில் சந்திக்கத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரில் நாசி ஜெர்மனியை சோவியத் யூனியன் தோற்கடித்ததைக் நினைவுகூரும் ‘வெற்றி தின’ நிகழ்வுகளின் போது மாஸ்கோவில் அவர் இதை கூறினார். செஞ்சதுக்கத்தில் நடந்த அணிவகுப்பில் பங்கேற்ற அவர், உக்ரைன் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய வீரர்களை பாராட்டினார்.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகவும், உக்ரைனின் பல நகரங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. ரஷ்யாவுக்கும் பொருளாதார ரீதியாக பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேற்கத்திய நாடுகளில் அதிகாரத்தில் உள்ள சிலர் இந்தப் போருக்கு காரணம் என புடின் குற்றம்சாட்டினார். 1989ல் பெர்லின் சுவர் இடிந்த பின் நேட்டோ கிழக்கு நோக்கி விரிவடையாது என அளித்த வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை என்றும், உக்ரைனை ஐரோப்பிய யூனியனுக்குள் இழுக்க முயற்சி நடந்ததாகவும் அவர் கூறினார். ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு நடந்தால் அது பேச்சுவார்த்தைக்கானது அல்ல; இறுதி ஒப்பந்தத்தை முடிக்க வேண்டிய கட்டமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், ஐரோப்பிய நாடுகளுடன் பாதுகாப்பு தொடர்பான பேச்சு ஏற்பட்டால், ஜெர்மனியின் முன்னாள் பிரதமர் ஜெரார்ட் ஸ்கோடருடன் மட்டுமே பேச விரும்புவதாகவும் புடின் தெரிவித்தார்.