கோரிக்கைகளை வலியுறுத்தி மே 25, 26 தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்தப்படும் என அகில இந்திய பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) ஊழியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

வேலைநிறுத்தத்திற்கு முன்பும் பின்பும் வரும் தொடர் விடுமுறைகள் காரணமாக, வங்கியின் கிளை சார்ந்த நேரடி சேவைகள் நான்கு நாட்களுக்கு மேல் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூட்டமைப்பு தெரிவித்தது. மே 23 நான்காவது சனிக்கிழமை, மே 24 ஞாயிறு விடுமுறை என்பதுடன், மே 27 பக்ரீத் பண்டிகை காரணமாக பாதிப்பு நீடிக்கும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்களை நிரப்புதல், மனிதவள மேலாண்மை அமைப்பு (எச்.ஆர்.எம்.எஸ்) தொடர்பான பிரச்னைகளை சரிசெய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சமீப ஆண்டுகளில் ஆட்சேர்ப்பு குறைந்ததால் பணிச்சுமை பலமடங்கு உயர்ந்ததாகவும், துணை நிலை ஊழியர்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் கூட்டமைப்பு தெரிவித்தது.

நிரந்த பணிகளில் அவுட்சோர்சிங் நியமனங்களை தவிர்க்க வேண்டும், ஊழியர் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும், பணி உயர்வு திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும், 2019க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இடமாற்றக் கொள்கை தேவை எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கோரிக்கைகள் முன்வைத்தும் தீர்வு கிடைக்காததால் சேவையின் தரம் பாதித்து வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படுவதாக கூட்டமைப்பு கூறியது.

மே 5 முதல் அடையாள போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், மே 11 அன்று மாவட்ட அலுவலகங்களில் மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம், மே 13 அன்று அந்தந்த தொகுதி எம்.பி.க்களிடம் மனு அளித்தல், சமூக ஊடகங்களில் பிரசாரம் ஆகியவை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர். மேலும் மே 19ல் நிதி அமைச்சரிடமும், மே 21ல் பிரதமரிடமும் மனுக்கள் அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறிய கூட்டமைப்பு, நேரடி வங்கி செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் என்றாலும் டிஜிட்டல் வங்கி சேவைகள் தொடர்ந்து இயங்கும் என தெரிவித்தது.