செந்தில் பாலாஜி தொடர்புடையதாக கூறப்படும் டான்ஜெட்கோ டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் மே 11 அன்று தள்ளுபடி செய்தது.
2021 முதல் 2023 வரை தமிழக மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த காலத்தில் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் நடவடிக்கைகளில் பெரிய முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அரசுக்கு ₹397 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறி அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவை அடிப்படையாக கொண்டு சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விசாரணைக்கு தடை கோரி டான்ஜெட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி, மேலும் கொள்முதல் பிரிவு நிதி கட்டுப்பாட்டாளர் வி.காசி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
விசாரணையின் போது, வி.காசி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் டேவ், சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை ஏற்க முடியாது என்றும், இந்த நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது. சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில் தலையிட முடியாது என்றும் அமர்வு தெரிவித்தது.





