பெண்கள் பாதுகாப்பையும் சட்டம்-ஒழுங்கையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படையை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தப் படை ஐஜி தலைமையில் செயல்படும்; முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வராக பொறுப்பேற்றபோது விஜய் கையெழுத்திட்ட மூன்று முக்கிய கோப்புகளில் ‘சிங்கப்பெண்’ திட்டமும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையாக இந்தப் படை உருவாக்கப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது.

அரசாணைப்படி, முதற்கட்டமாக போலீஸ் தலைமையகத்தில் இந்த சிறப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஐஜி, எஸ்பி, டிஎஸ்பி 2 பேர், காவல் ஆய்வாளர்கள் 4 பேர், எஸ்ஐக்கள் 8 பேர் மற்றும் பிற தரவரிசை காவலர்கள் 20 பேர் இடம்பெறுகின்றனர்.

பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும், சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையிலும் இந்தப் படை செயல்படும். பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் படையின் இருப்பு அதிகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெறப்படும் புகார்களில் உரிய நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகளிலும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை செயல்படும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.