சிவகாசி, விருதுநகர்: சிவகாசி சட்டசபை தொகுதியில் முதல் பெண் எம்.எல்.ஏ. ஆக வெற்றி பெற்று வரலாறு படைத்த த.வெ.க. வேட்பாளர் கீர்த்தனாவுக்கு அமைச்சர்பதவி வழங்கப்பட்டுள்ளது.

1957-ல் உருவான சிவகாசி தொகுதியில் காலப்போக்கில் பல்வேறு கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. 2011-ல் அ.தி.மு.க. சார்பில் வென்ற கே.டி. ராஜேந்திரபாலாஜி அமைச்சராக ஆனார்; 2016-லும் வெற்றி பெற்று அமைச்சராக தொடர்ந்தார். 2021-ல் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் வெற்றி பெற்றார்.

நடைபெற்ற 2026 சட்டசபை தேர்தலில் தற்போதைய எம்.எல்.ஏ. அசோகன் மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆகியோரை தோற்கடித்து கீர்த்தனா வெற்றி பெற்றார். இதையடுத்து த.வெ.க. தலைவர் விஜய், 29 வயதான கீர்த்தனாவை அமைச்சராக நியமித்தார்; முதல்வர் விஜயுடன் நேற்று அவர் பதவியேற்றார்.

கீர்த்தனா புதுச்சேரி பல்கலையில் எம்.எஸ்.சி. புள்ளியியல் படித்துள்ளார். தேர்தல் வியூக வகுப்பு நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவமும் உள்ளது. 2021-ல் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் அமைப்பில் தி.மு.க.விற்காக அரசியல் ஆலோசகராக பணியாற்றிய அவர், பின்னர் ஆந்திரா மற்றும் கோவாவில் தேர்தல் பிரசாரங்களுக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் சரளமாக பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது தந்தை சம்பத் விவசாயி; தாய் விஜயலட்சுமி குடும்பத்தலைவி. சகோதரி தரணி திருமணமாகி தேனி மாவட்டத்தில் வசிக்கிறார். விருதுநகருக்கு பல் மருத்துவக் கல்லூரி வராததை சுட்டிக்காட்டி அவர் செய்த ஒரு போராட்டக் காட்சியும் முன்பு வைரலானதாக கூறப்படுகிறது.