மேற்காசியா மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் அதிகரித்து வரும் நெருக்கடியைத் தணிக்க அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஈரான் அளித்த பதில் “முற்றிலும் ஏற்க முடியாதது” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

தகவலின்படி, கடந்த பிப்ரவரி இறுதியில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானுக்கு எதிராக போரைத் தொடங்கின. போர் தீவிரமடைந்த நிலையில், உலக கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்ததுடன் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ஈரானின் தலையீடு இல்லாமல் பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு வழங்கும் திட்டத்தை டிரம்ப் அறிவித்தார். இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், தன் எல்லைப் பகுதியில் அன்னிய நாட்டுப் போர்கப்பல்கள் நடமாட்டம் இருந்தால் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தது.

போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா எடுத்த முயற்சிகளுக்கான ஈரான் பதிலைப் பற்றி டிரம்ப், “எனக்கு இது பிடிக்கவில்லை; ஈரானின் பதில் முற்றிலும் ஏற்க முடியாதது” என்று கூறினார். மேலும், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை நெருங்கும் எவரையும் அமெரிக்கா தாக்கும் என்றும், ஈரான் ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு உதவ பிரிட்டன் தனது ‘டிராகன்’ போர்கப்பலை பாதுகாப்புப் பணிக்காக அனுப்ப உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போர்கப்பல்களை அப்பகுதியில் நிலைநிறுத்தக் கூடாது என்றும், இத்தகைய நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி அளிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. தடையற்ற போக்குவரத்தை மீண்டும் தொடங்கவும், கப்பல்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பிராந்திய நாடுகள் திடமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சீனா கோரிக்கை விடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.