ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு பாதுகாப்பு உதவி வழங்கும் நோக்கில், பிரிட்டன் தனது HMS டிராகன் டிஸ்ட்ராயர் போர் கப்பலை மேற்காசியாவுக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக, பிரிட்டன் ராணுவ அமைச்சகத்தை மேற்கோள் காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரி இறுதியில் தொடங்கிய இஸ்ரேல்–அமெரிக்கா–ஈரான் தொடர்பான போர் தீவிரமடைந்த நிலையில், உலக கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியதாக கூறப்படுகிறது. இதனால் உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்ததுடன், பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலை உருவானது.

இதற்கிடையில், ஈரானின் தலையீடு இல்லாமல் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், தன் எல்லைப் பகுதியில் அன்னிய போர் கப்பல்கள் நடமாடினால் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தது.

இந்த சூழலில், சீன எண்ணெய் கப்பல் மற்றும் இந்திய மாலுமிகள் இருந்த ஒரு சிறிய ரக கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன கப்பலில் இருந்தவர்களுக்கு பாதிப்பு இல்லை என்றாலும், இந்திய மாலுமிகள் சென்ற கப்பல் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

பிரிட்டன் ராணுவம் கூறுகையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக போக்குவரத்தை பாதுகாக்க உதவும் சாத்தியமான சர்வதேச பணிக்கு முன்னதாக HMS டிராகன் கப்பல் அனுப்பப்படும் என்றது. மேலும், பிரிட்டன்–பிரான்ஸ் இணைந்து வழிநடத்தும் பன்னாட்டு கூட்டணியின் ஒரு பகுதியாக, சூழல் அனுமதிக்கும் போது ஜலசந்தியை பாதுகாக்க பிரிட்டன் தயாராக இருப்பதை இது உறுதி செய்யும் என்றும் தெரிவித்தது.